Friday, May 30, 2008

பெண்மை திண்ணும் பேய்கள்


பெண்மை திண்ணும் பேய்கள்



உனக்கு பிடித்த நிறத்தில்

எனக்கான புடவை உடுத்தி


நீ விரும்பும் சுவையில்

உணவு சமைத்து


நீ குளிக்கும் சோப்பில்

என் உடல் கழுவி


குடும்பமெனும் குலவிளக்காய்

குழந்தை பெற்றெடுத்து


கூப்பிட்ட போதெல்லாம்

கொஞ்சி குலாவி


சுயம் தொலைத்து

சுருண்டு கிடக்கும்-எனக்கு


அடுத்த பிறவியிலாவது

உன் ஆண்மை தின்ன

அனுமதிப்பாயா என் கணவா ?

Monday, May 26, 2008

வாழ்க மக்களாட்சி!!!!!!

இலவசமெனும் எலும்பு காட்டி
இச்சை தீர்த்தனர் பதவி வெறியர்கள்

இளிச்சவாயர்கள் இட்ட வாக்கில்
இனிதே ஆரம்பபானது இருண்டகாலம்

மளிகை,மண்ணெண்ணெய் விலையுர்வு
மலிவு விலை மதுவில் மறந்து போனது

கழிவுநீர் கடலும், அழுக்கு சுமக்கும் ஆறும்- இலவச
கலர் டி.வி. கவர்ச்சியில் காணாமல் போனது.

இருக்கும் விவசாயிக்கே தண்ணிரில்லை-இலவச
நிலத்தில் என்ன விதைப்பது?


கட்டுமான பொருளின் விலையை கட்டுபடுத்த முடியவில்லை
கேபிள் டி.வி.யை கட்டுபடுத்த ஏனோ அவசரம்?

பிழைப்புக்கு கடல் தாண்டும் மீனவர்களை காக்க முடியாதவர்களுக்கு
பிடுங்குவதற்கா கப்பல்துறை?

இறங்கி உதவ துப்பில்லை-இலங்கை தமிழர்களுக்கு
இரங்கல் கவிதை யாருக்கு வேண்டும்?

மாமன்,மருமகன் பிரச்சினையில்
மக்களை நிணைக்க நேரமேது?

கூட்டணி தர்மம் என்ற பெயரில்
கூட்டு களவாணிக்கு துணை போகும் கட்சிகளும்
சினிமாலும்,சீரியலிலும்
சிந்தை மறந்த நாமும் இருக்கும் வரை
நன்றாகவே நடக்கும் மக்களாட்சி

Friday, May 23, 2008

தமிழனாய் தமிழனுக்கு

டமில் அல்ல தமிழ்
தாயறிந்தோம்
தந்தை முகம் அறிந்தோம்
தாய்த்தமிழை ஏன் மற்ந்தோம்?
நாகரீகமெனும் போர்வை போர்த்தி
நஞ்சு கலந்த பாலை பருகுவதுண்டோ?
அமுதமாய் அன்ணை மொழியிருக்க
அதில் ஆங்கிலம் கலப்ப்து தவறன்றோ?
நாகரீக நஞ்சு விலக்கி
தனிதமிழை காத்திடுவோம் வாரீர்!

தமிழ் மணத்திற்காக ஒரு தகவல்

தமிழ் மணத்திற்காக ஒரு தகவல்

நன்பர் இளையகவியின் ஆலோசனைப்படி என்னை பற்றி சிறுகுறிப்பை சிந்தியிருக்கிறேன்.(தடங்கலுக்கு அன்பர்கள் மன்னிக்கவும்)

இயற்பெயர்:இராமன்

இயற்றுவதற்காக வைத்தது:வேலுபாரதி

வயது: அவசியம் வேண்டுமா?(காதை கொடுங்கள் 26)

தொழில்:வேலையை தேடுவதே வேலையாக கொண்டிருக்கிறேன்.

பொழுதுபோக்கு: சமூக அக்கறையில் கிறுக்குவது.

லட்சியம்:இப்போதைக்கு தமிழ் மணத்தில் இடம் பிடிப்பது. (பின்னால் மக்கள் மனதில்)

இது போதுமென நினைக்கிறேன்.

பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்ததற்கு நன்றிங்கோ!!!!!

வேலை ஏய்ப்பு அலுவலகம்


வேலைஏய்ப்பு அலுவலகம்


நேற்று பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது ஒரு செய்தி. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முதல் நாள் இரவிலிருந்தே காத்திருந்திருந்தனர் மாணவமணிகள். படித்தவுடன் வேதனையும்,எரிச்சலும் சேர்ந்தே எழுந்தது.


ஏன் இந்த அவசரம்? அல்பத்தனம்? யாருடைய தவறு? சீனீயாரிட்டி என்ற பெயரில் நடக்கும் இந்த கிறுக்குத்தனத்திற்கு என்றுதான் முடிவு வருமோ? இதற்கு தீர்வுதான் என்ன? என்று தீவிரமாக யோசித்தேன்.


முதலாவதாக மாணவர்கள் பதிவு செய்ய அலுவலகத்திற்கு வர தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை எனவும்,சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளே ஒவ்வொரு வருட முடிவிலும் தங்களுடைய மாணவர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும். சீனியாரிட்டி என்பது மதிப்பெண்கள் மற்றும் நன்னடத்தை, N.C.C,N.S.S போன்றவற்றில் ஆற்றிய சேவை ஆகியவற்றை பொறுத்தே வகைப்படுத்தப் பட வேண்டும். இதன் மூலமாவது இந்த அவவலம் தீர வேண்டும் என்பதே எனது (இதுவரை எம்ப்ளாய்மெண்ட் ஆபிசில் கால் வைக்காத பையனின்) விருப்பம்.

Thursday, May 22, 2008

இன்றைய இளைஞன்


ஏகாதிபத்திய முதலாளிகள் Vs ஏமாந்த தொழிலாளிகள்


கரூர்,திருப்பூர் - தமிழகத்தின் வீட்டு ஜவுளி ஏற்றுமதி துறையில் பெரும் பங்கு வகிக்கும் நகரங்கள். இந்த சாதனைக்கு பின்னால் உள்ள வேதனையை வெளிக்கொணரும் சிறு முயற்ச்சியே இந்த பதிவு.

இம்மாதிரியான நகரங்களில் நடக்கும் ஏற்றுமதி தொழிலில் வளம் பெறுவது முதலாளி வர்க்கம் மட்டுமே என்பது வேதனைக்குரிய விஷயம்.அரசு இயற்றிய நடைமுறைகளும் சட்டங்களும் எட்டளவில் மட்டுமே இருப்பது வேடிக்கையான விஷயமும் கூட. இந்த முதலாளிகள் தூக்கி எறியும் லஞ்சம் எனும் எலும்புதுண்டுக்காக அடித்துக்கொள்ளும் நாய்களாய் மட்டுமே அரசு அதிகாரிகள் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம்.

ஏற்றுமதி நகரத்தின் பின் உள்ள நரகம்

காலை 9.30 மணி வீதிகளில் விரையும் வாகனங்கள்; ஆடு,மாடுகளை போல் அடைக்கப்பட்டு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள். இந்த காட்சியை இந்நகரங்களில் சர்வசாதரணமாக பார்க்க முடியும். 30 பேர் பயணம் செய்யக் கூடிய வாகணத்தில் 70 பேரை அனாசயமாக ஏற்றி செல்லும் திறமை அவர்களுக்கு மட்டுமே உண்டு. இதையெல்லாம் கேட்க ஆட்களில்லையா? வென நினைக்கிறீர்களா? ஏன் இல்லை? ஆனால் பாவம் அவர்களுக்கு தீபாவளி,பொங்கல் நாட்களில் மட்டுமே எலும்பு துண்டை பொறுக்கும் வேலையிருக்கும்.

ஒரு வழியாக மரண பயணம் முடிந்தவுடன் தொழிற்சாலையை அடைந்தால் மேற்பார்வையாளர் அடுத்த கொடுமைக்கு தாயராக இருப்பார். தன்ணை நன்றாக கவனித்துக் கொள்ளும் பெண்களுக்கும் மேற்கண்ட வேலைகளுக்கு உதவி புரியும் ஆண்களுக்கு எளிதான வேலையும், முரண்டு பிடிக்கும் அகங்காரம்(அவர்களுடைய மொழியில்) பிடித்தவர்களுக்கு கடினமான வேலையும் கொடுத்து அன்றைய நாள் ஆரம்பமாகும்.

அடுத்து இனிதே வரும் தேனீர் இடைவேளை. பால்குடி வயதோடு மறந்து போன சங்கை நினைவூட்டும் டம்ளர்கள்.அந்த பாதி டம்ளர் டீயையும் பெறும் பாக்கியம் பாதி பேருக்கு கிட்டாது.

ஒரு வழியாக இரவு 7 மணிக்கு வேலை முடிந்தது என்று வெளியெ வந்தால் அவ்வளவுதான். சூப்ரவைசர் சிங்கத்திற்கு கோவம் வந்து விடும். சிப்மெண்ட் அவசரம் இன்று இரவு வேலை என பெண்களை(பிடித்த) மட்டும் இருக்கச் சொல்லும். 12 மணியளவில் வேலைகளை முடித்து விட்டு மீண்டும் ஆரம்பமாகும் மரண பயணம்.

மாதத்தில் ஒருநாள் வருவார் கன்சல்டண்ட்.வேறொன்றுமில்லை புதிதாக ஒரு வாடிக்கையாளர்(வால் மார்ட்,கே மார்ட் வகையறா) வருகை தர இருப்பதாகவும் அப்போது அவர்கள் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை அளிக்க ஒரு பயிற்சி தருவதாகவும் சில லட்சங்களை பிடுங்கி விட்டு போவர். "முறையான" பயிற்சியின் முடிவில் நிறுவனம் இந்த ஆர்டர் கிடைத்தால் உங்களுக்கு பல வசதிகளை செய்து தரும், எனவே சொல்லி தரப் பட்ட பதில்களை கூறி நிறுவனத்தை தூக்கி நிறுத்தும்படி வேண்டுகோள் ஒன்றினை விடுப்பார்.நமது அப்பாவி பலியாடுகளும் ஓநாய்களின் மானத்தை காப்பாற்ற பதில்களை இரவு முழுவதும் மனப்பாடம் செய்து விசுவாசமாய் ஒப்பிப்பர்.

நமது மதிப்பிற்குரிய வாடிக்கையாளரும் வருகை தந்து, முதலாளிகளின் "வரவேற்பில்" மனம் மகிழ்ந்து , தொழிலாளிகளின் பதிலில் புல்லரித்து போய் ஆர்டர்களை அள்ளி கொடுத்து செல்வர்.அதன் பின்னால் ஆரம்பிக்கும் பழைய கொடுமை.

கரூர் நகரத்தின் கொடுமைகள் சில

1) தொழிலாளிகளுக்கான சலுகைகள் வழங்கப்படுவதில்லை

2) ESI, PF போன்ற திட்டங்கள் நடைமுறைபடுத்தபடுவதில்லை

3) அரசு விதித்துள்ள 8 மணி நேர வேலை முறை பயன்பாட்டில் இல்லை

4) அரசு விடுமுறை நாட்களிலும் வேலை செய்யும் அவலநிலை

5) குழந்தை தொழிலாளர் நடைமுறையிலுள்ளனர்

6) பல தொழிலாளர்களுக்கு இன்னமும் தங்களுடைய குறைந்தபட்ச கூலி என்பது என்னவென்றே தெரியாத கொடுமை

7) அடிப்படை வசதிகள் கூட சரியில்லாத தொழிற்ச்சாலைகள் எத்தனை எத்தனை.

8) casual leave க்கு கூட சம்பளம் பிடிக்கும் முதலாளி வர்க்கம்.

9) கூலி வேலைக்கு வரும் பெண்களை பாலியல்ரிதியிலான கொடுமைக்கு தள்ளும் முதலாளி வர்க்கம்.

10) கொத்தடிமைகளைப்போல் தொழிலாளிகளை நடத்தும் தொழிற்சாலைகள்

11) முழு இரவு வேலை செய்து விட்டு போனாலும் மறுநாள் காலை 9:30 க்கு வராவிட்டால் வசவுகளை கொட்டும் வக்கிரம்.

ஆகவே அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களே நீங்கள் வால்மார்ட், கே மார்டில் வாங்கும் எல்லா பொருட்களிலும் எங்கள் தொழிலாளியின் வியர்வையும் ரத்தமும் உறைந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்